Wednesday, 17 July 2019

பயணம்

அன்னையின் மடியினின்று..
ஆரம்பித்த பயணமிது!!
முன்னேறும் வழிமுழுதும்..
முரண்நிறை பயணமிது!!

சகப்பயணி இறங்கினாலும்..
சளைக்காத பயணமிது!!
விகற்பங்கள் விளைந்திருந்து..
விளங்காத பயணமிது!!

இறங்கிடும் இடம்வந்தும்..
இசைவடையா பயணமிது!!
மறந்திட மனமின்றி..
மிசையேறும் பயணமிது!!

ஏளனங்கள் இறக்கிவிட்டு..
சாளரக் காற்று வாங்கி..
சளைக்காது பயணிப்போம்!!
நற்காலை வணக்கம்!!!
(விகற்பம் - மனக்கோனல் / மிசை - மேல்)

ஆசிரியர்

கல்வியெனும் கலைச்செல்வம்-அதை
கற்பிப்போரும் நம் தெய்வம்
எல்லையில்லா உயர்நிலைக்கு-நமை
ஏற்றிவிடும் ஏணிகளாம்

தாயின் மொழியெனினும்-அதை
தவறின்றி நாம் கற்க..
தூய மனம்கொண்டு-உடன்
துவளாமல் துணை நிற்பர்!!

அறிவுச் சுடர்கொண்டு-பல
ஆயிரம் விளக்கேற்றிடுவர்!!
சிறகடைந்து சிகரம் தொட்டும்-நாம்
செய்நன்றி காட்டி நிற்போம்!!

மாசிலாத மனம் கொண்ட..
ஆசிரியர் அடி பணிவோம்!!
இனிய காலை வணக்கம்!!!

வீடு

வாசலிலே வண்ணக்கோலம்..
வகையாய் வரவேற்க..
ஊசலாடும் தோரணங்கள்..
உகந்தாடி உபசரிக்க..

மூலிகைப் புகைக்காற்று..
முழுசுவாசம் புகுந்துவர..
பாலும் பொங்கிக்கொட்ட..
பழமைகள் பறந்தோட..

ஆனவம் அகன்றோட..
அத்வைத ஒலிபரவ..
புனிதமாய் நிகழ்ந்ததங்கு..
புதுமனைப் புகுவிழா!!

இல்லமென்னும் இருப்பிடம்..
இன்னிசையாய் இனித்திடும்!!
காலை வணக்கம்!!!

Tuesday, 16 July 2019

கோலம்

புள்ளிகளால் பூத்த பூக்கள்!!
புன்னகைத்து நின்றனவே!!
வெள்ளை இழைக்கோட்டினாலே..
வெளிவந்த வேய்ங்குழல்கள்!!
மயில்கள் ஆடும் மகத்துவமும்..
மான்கள் ஓடும் மாண்புகளும்..
கயல்கள் துள்ளும் காட்சிக்கும்..
கன்னிப் பெண்கள் கைவண்ணம்!!
பக்குவமாய்ப் பார்த்திழைக்கும்..
பாந்தம் நிறை பவித்திரங்கள்!!
சிக்கலிழைச் சித்திரங்கள்!!
சிந்தை கவர் முத்திரைகள்!!
வாசல் வண்ண ஜாலங்கள்!!
வகை செரிந்த கோலங்கள்!!
காலை வணக்கம்!!!

கடிகாரம்

கண்ணாடிப் பேழைக்குள்..
கட்டுண்ட மணித்துளிகள்!!
எண்களான நேரங்கள்..
எட்டாத உயரத்தில்!!

ஒருகால் சிறுத்திருந்தும்..
ஓட்டமோ நிற்பதில்லை!!
பிரிவுகள் நேர்ந்தாலும்..
பிடிமானம் அகல்வதில்லை!!

அடிக்கடி உனைப்பார்த்தும்..
அவசியம் தீருவதில்லை!!
துடிக்கின்ற இதயம்போலே..
துவண்டு நீ துயில்வதில்லை!!

காலம் காட்டும் கருவியே!!
ஞாலம் ஆளும் ஞானியே!!
அன்பு காலை வணக்கம்!!

புடவை

வண்ணவண்ண நூல் கோர்த்து..
வடித்து வைத்த வகைக் கண்டு..
எண்ணமோ ஏங்கி நிற்கும்!!
எடுத்துடுத்த ஆசை வரும்!!

சேர்த்து வைத்த கொசுவங்களோ..
செழித்தாடி அழகு தரும்!!
போர்த்தி நின்ற முந்தானை!!
பொழியும் நீர் ஒத்திருக்கும்!!

பட்டாகி பளபளக்கும்!!
பருத்தியது பதமளிக்கும்!!
எட்டு கஜம் எழிலாகி...
ஏறெடுத்துப் பார்க்கத் தூண்டும்!!

அம்மா வாசனை அதிலுமுண்டு_அவள்
அழுக்கோடு அணைத்தாலும் ஆனந்தமுண்டு!! காலை வணக்கம்!!

பெண்மை

குழந்தையென பிறக்கும்போதே..
கொடுத்து வைத்த குலமன்றோ..
அழகுக்கும் அன்பினுக்கும்..
அடுத்த பொருள் அவளன்றோ..
அன்னையாய் அரவனைத்து..
அக்காளாய் அன்பு தந்து..
சின்னத்தங்கை எனப்பிறந்தும்..
சிக்கல்களில் துணை நின்று..
மகளாகி மகிழ்வு தந்து..
மனைவியாகி மாண்பளித்து..
அகமகிழச் செய்யும் நம்..
அறிவையரைப் போற்றிடுவோம்!!
பெண்மை போற்றுவோம்!!
பெருமிதம் கொள்வோம்!!
இனிய மகளிர் தின வாழ்த்துகள்!!





ரயில்

அடுக்கி வைத்தப் பெட்டிகள்..
அசைந்து ஆடி நகருதே!!
இடையில் கேட்கும் ஓசையோ-குயில்
இசையைப் போல இனிக்குதே!!

தனிமையான பாதைதனில்!!
தடைகளின்றி ஓடுதே!!
இனிய சன்னல் காற்றுக்கு-ஒரு
ஈடு இணை இல்லையே!!

சேர்ந்திடாத பாதை மீது..
செல்லும் இலக்கு நோக்கியே!!
ஊர்ந்து செல்லும் உனதழகு-என்றும்
உலுக்கிடும் என் உள்ளமே!!

தாலாட்டும் தனிப்பயணம்!!
தண்டவாளத் துணையுடன்!!
நற்காலை வணக்கம்!!!

கண்ணாடி

பிம்பங்களின் பிறப்பிடமே!!
பிழையில்லாப் பெட்டகமே!!
அமைதியின் அழகியலே!!-அருகே
அழைத்திடும் ஆனந்தமே!!

நிறமில்லா நிதர்சனமே!!
நிசம்காட்டும் நித்தியமே!!
உறவான ஒளிப்பிழம்பே!- அவர்
உசிதமான உருவகமே!!

சிரித்தால் சிரித்திருப்பாய்!!
சிலநேரம் ரசித்திருப்பாய்!!
உரித்தாய் உனைப்பெற்றோர் - தம்
உலகமாய் ஆகிடுவாய்!!

எனக்கே எனைக் காட்டும்..
எழில் சூழ் ஏகாந்தம் நீ!!
அன்பு காலை வணக்கம்!!

Sunday, 14 July 2019

நீர்

முக்கால் பாகம் முன் நின்றும்..
முழுதாய் ஆளும் முதன்மை நீ!!
உக்கிர வெப்பம் தணிப்பதோடு..
உழவுக்குதவும் உவகை நீ!!

சுத்தத்தின் சூத்திரம் நீ இன்று..
சுமையுந்தில் சுற்றுகின்றாய்!!
எத்துணை தவிப்பு தந்தும்!!
எம் தாகம் தீர்க்கின்றாய்!!

குளமிருந்து குடம் சுமந்து..
கொணர்ந்திட்ட காலம்போக..
வளமிழந்து வகை மறந்தாய்!!
வீண் விலைப் பொருளாகிட்டாய்!!

தாய் போல நீ தயை செய்கிறாய்!!
உயிராதாரமாய் உலகாள்கிறாய்!!
காலை வணக்கம்!

உறவுகள்

அன்னை தந்தை அக்காளென்றும்!
அண்ணன் தங்கை தம்பியன்றும்!
இன்னமுதாய் இயன்று நிற்கும்!
இண்டையென்றே பூத்து வரும்!
உறவுகளாய் ஊன்றி வரும்!
உதிரம் ஒன்றி உளம் மகிழும்!
பிற நிலையாய்ப் பின்னே வரும்!
பதுமராகம் போல மின்னும்!- சில
ஒன்று விட்ட சொந்தங்களும்..
ஒத்துழைக்கும் உண்மையாகும்!
அன்றிருந்த அன்பு தரும்!!
ஆத்மார்த்தமாய் விளங்கும்!!
உறவுகளோடு ஒன்றிடுவோம்!!
நிறைவுடனே வாழ்த்திடுவோம்!!
காணும் பொங்கல் வாழ்த்துக்களுடன் காலை வணக்கம்!!!
(இண்டை-தாமரை, பதுமராகம்-மாணிக்கம்)

Saturday, 13 July 2019

பால்

கன்னுக்குட்டி குடித்த மிச்சம்..
கறந்தெடுத்த அழுதமாம்!!
அன்னம் அதைப் பிரித்தெடுத்து- தன்
அறிவுத்திறன் காட்டுமாம்!!

தூய்மைக்குத் துணைப்பொருளாம்!!
துரிதச்சத்து நிச்சயமாம்!!
தாய்மை அன்புடன் பசு..
தருகின்ற இன்னமுதாம்!!

குழவிகட்டும் நல்லுணவாம்!!
குறையில்லா கொடையதுவாம்!!
பழகிநின்று பசியாற்றி..
பற்களுக்கும் பயன்தருமாம்!!

புரதமோடு சுண்ணச்சத்தும்..
புகட்டித்தரும் புனிதமது!!
இனிய காலை வணக்கம்!!

எண்ணம்

என் எண்ணத்தின் வெளிப்பாட்டை
எழிலாக எடுத்துரைக்க..
அன்னைத் தமிழிவளை-உடன்
அழைத்தே அடி எடுத்தேன்!!

விந்தையான விமர்சனங்கள்..
விரைந்தோடி வந்திடினும்!!
முந்தவே முயல்கின்றேன்-சில
முரண்களைத் தள்ளி விட்டே!!

ஊக்குவிப்போர் உயர்த்திவிட..
உளமகிழ்ந்து உழைத்திடுவேன்!!
ஆக்கிடவே விழைகின்றேன்-நெஞ்சை
அள்ளும் அழகுத் தமிழ்க்கவிதை!!

ஆதவன் ஒளி பரப்ப....
அகிலத்தில் அது சேர....
அன்பு காலை வணக்கம்!!

மடமை

அற்புதமாம் தமிழ் மொழியை..
அறியேன் என்றுரைத்திட்டால்..
பெற்றெடுத்த தாயவளின்..
பெயரறியேன் என்பதாகும்..
கற்றிடக் கனியவைக்கும்.. கண்ணான மொழியிவளை-கற்க
முற்றிலும் முயலாதவர்..
மூடரென்றே ஆவர்!!
மற்ற மொழி பலவறிந்தும்..
மண்ணின் மொழியறியாதோரை..
வற்றிட்டக் கேணி என்றே..
வையம் உரைத்திடுமே!!!
எண்ண எண்ண இனிக்கும்..
அன்னைத் தமிழிதனைக்..
கண்னெனக் காப்பதனைக்..
கடமை எனக்கொள்வோம் !!!
இனிய காலை வணக்கம்!!

நட்பு

உதிரத்தின் உறவல்ல - இது
உள்ளத்தின் உயர் உறவு
நதிமூலம் தேடிடாது நம்..
நலன் காக்கும் நல்லுறவு!!
வாடித் துடித்திருந்தால் - நம்
வாயில் வந்து நிற்கும்...
சாடினாலும் சகித்திருக்கும்!!
சங்கீதமாய் இனித்திருக்கும்!!
தாகத்தின் தண்ணீராய் - என்றும்
தன்னலம் மறந்து வரும்!!
சிநேகத்தில் சிறகடிக்க..
சீராக சேர்ந்திருக்கும்!!

உற்ற நட்பு உடனிருக்க-நம்மை
ஊழ்வினையும் நெருங்காது !!
காலை வணக்கம்!!

அப்பா

பெற்ற துயரது அன்னைக்கெனினும்..
பெருமைக்கண்ணீர் அவருக்கன்றோ??
உற்ற மகிழ்வதை வெளிக்காட்டாது..
உறவுகளின் முன் அவர் ஊமையன்றோ?

ஊட்டி வளர்ப்பவள் தாயேயெனினும்..
உழைத்துனை உயர்த்துதல் அவரே யன்றோ?
காட்டிடாமல் தன் அன்பொளித்தாலும்..
கழை ஓசையாய் அது வெளிப்படுமே!

தோளுக்குயர்ந்ததும் தோழனாவார்!
தாங்கிய கரம் கொண்டு தழுவிடுவார்!!
சாளரக் காற்றென சத்தமின்றி..
சங்கீதமாய் அவர் இனித்திடுவார்!

விந்தையென்றாகி வியப்புதரும்..
தந்தையென்றான தவமன்றோ!!
(கழை - வேய்ங்குழல்)
இனிய தந்தையர் தின நல்வாழ்த்துகள்😍

அம்மா

உடலினுள் ஊன்றி நின்று..
உயிர்கொண்டு உருவம் தந்து.. உலகினில் உதிக்கச் செய்து.. உதிரத்தை உணவாய்த் தந்து.
மடமைகள் பொறுத்துக் கொண்டு.. மண் பதம் மதிக்கச் செய்து.. மகத்துவம் புரிய வைத்து.. மகிழ்வுகள் அள்ளித் தந்து.. இடர்களைக் களைந்தெடுத்து..
இயல்புகள் இயம்பி ஈந்து இதுதானே வாழ்கையென..
இறைவியாய் அளிப்பவளே!

அவளல்லவோ உயிர்!!
அவள் அன்பிருக்க ஏது துயர்!!
அன்பு காலை வணக்கம்!